Select Page

“ நீயே நீ உண்ணும் உணவு ”

சைவ உணவின் மகத்துவத்தை காலம் காலமாக பல தத்துவ ஞானிகள், முனிவர்கள், சிறந்த சிந்தனையாளர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

இவ்வறிஞர்கள் சைவ உணவைப் பற்றி கூறிய கருத்துக்களை இன்றைய காலத்தில்தான் அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது. சைவ உணவுதான் நமது உடலுக்கும், உள்ளத்திற்கும், ஆன்மாவிற்கும், பூமிக்கும் மிகச் சிறந்தது என பலர் உணர்ந்துவருகின்றார்கள்.

“நீயே நீ உண்ணும் உணவு” என்றொரு வாசகம் உண்டு. கிழக்கு நாடுகளில் பல்லாயிரம் வருடங்களாக சைவ உணவுதான் உடலுக்கும், உள்ளத்திற்கும் வலுவூட்டுவதாக அறிந்து வந்துள்ளனர். மாமிச உணவை உண்ணுவதினால் எண்ணமும், உணர்வும் உண்டாக்கும் அதிர்வுகள், விலங்குகளைப் போன்று அமைவதால், அவைகளின் குணாதிசயங்களை அடைகின்றோம்.

நமது மன அழுத்தத்தினால் சுரக்கப்படும் “ஹார்மோன்”கள், நம் உடலில் எந்தவித பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதையும், நாளடைவில் இது உடலில் உள்ள எந்த உறுப்பை பாதிக்கின்றது என்பதையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. விலங்குகளை பலியிடும் இடத்திற்கு கொண்டு செல்லும் பொழுது, அவைகள் பயத்தினால் நச்சு திரவங்களை வெளியிடும். இவற்றின் விளைவுகளை சிறிது கற்பனை செய்து பாருங்கள்.

அசைவ உணவை உட்கொள்பவர்கள் விலங்கின் மாமிசத்தை மட்டும் உண்ணுவதில்லை, அதனுடன் அவ்விலங்கு பயத்தினால் வெளியிடும் நச்சு திரவங்களையும் சேர்ந்து தான் உட்கொள்கின்றனர். இதனால், பல தீய பின்விளைவுகள் ஏற்படும். எனவே கிழக்கு நாட்டு கலாசாரத்தில், உடலுக்கு தீங்கு விளைவிக்காமல், ஒத்துபோகும் தாவர உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக்கத்தை மேற் கொண்டுள்ளனர்.

ஆன்மிக மற்றும் அறநெறி காரணங்களுக்காக பல ஆசான்கள், முனிவர்கள், ஞானிகள், சித்தர்கள், குருமார்கள் சைவ உணவையே வழிவழியாக வலியுறுத்தி வந்துள்ளனர். பல முக்கிய காரணங்களுக்காக, ஆன்மிகப் பாதையில் வாழ்வோருக்கு சைவ உணவு மிகவும் அவசியம்.

தியானத்தில் ஊன்றியிருக்க நாம் அமைதியுடனும், ஒருமை உணர்வோடும் இருக்க வேண்டும். நாம் அசைவ உணவை உட்கொண்டால், நம் உணர்வு நிலை பெரிதும் பாதிக்கப்படும்.

வாழும் உயிர்கள் எதற்கும் எவ்விதத் தீங்கும் விளைவிக்காமல், அஹிம்சை வழியில் இயற்கையாய் அமைந்ததுதான் சைவ உணவு. எனவே, சித்த புருஷர்கள், காலங்காலமாய் மாமிசம், மீன், முட்டை போன்றவற்றை நீக்கி, சைவ உண்வையே உட்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஒரு மனிதனுக்கு தேவையான மாமிசத்தைப் பெற ஒரு பசுவுக்கு எவ்வளவு தானியம் தேவையோ, அத்தனை பலருக்கு உணவாக அளிக்க முடியும் என்கின்றனர். பயிர்களையும், காய்கறிகளையும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் எரி பொருள், தண்ணீர், சக்தி முதலியவற்றை விட, கால் நடைகளை வளர்ப்பதற்கும், அவற்றின் மாமிசத்தை பதனிடுவதற்கும் அதிகமாகத் தேவைப்படுகின்றன. என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நம்முடைய ஊக்கச் சத்துகளை தக்க வைத்துக் கொள்ள சைவ உணவு சிறந்ததாகும். நம் உடல், உள்ளம், ஆன்மா, பூமி இவைகளை எவ்வாறு ஆரோக்கியமாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். நல்ல ஆரோக்கியம், அதிகமான மனோசக்தி, சிறந்த ஆன்மிக ஆற்றல் இவற்றைப் பெற முறையான, அளவான சைவ உணவால்தான் முடியும்.

சைவ உணவை மேற் கொள்ளுவதால் நாம் வாழும் பூமி, நம் உடல், உள்ளம், ஆன்மா இவையெல்லாம் தூய்மையாகவும், நலமாகவும் இருக்கும். இதனால், நம் வாழ் நாள் முழுவதும், அமைதியும், ஆனந்தமும் நிறைந்த ஒரு சொர்க்கலோகமாத் திகழ துணை புரிகின்றோம்.

 

“தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன் உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்”

தன் உடம்பை பெருக்கக் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?

-திருக்குறள்